எச்சரிக்கை விடுக்கும் விதமாக மத்திய கிழக்கில் ராணுவ பலத்தை அதிகரிக்கும் அமெரிக்கா
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதன் ராணுவ பலத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நீண்ட தூரம் சென்று குண்டுகளை வீசக்கூடிய போர் விமானம், ஏவுகணைகளை அழிக்க உதவும் தற்காப்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் அமெரிக்கா அவ்வட்டாரத்தில் குவித்து வருகிறது.
ஈரான்- இஸ்ரேல் இடையே கடுமையான பூசல் நிலவுகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஒன்று மற்றொன்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க தற்போது தனது படை பலத்தை அதிகரித்துள்ளது.
ஈரானும் அதன் கூட்டாளிகளும் அமெரிக்காவையோ அதன் நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மாதமும் இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது. அதன் தரைப்படை வீரர்கள் பலரை மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு அது அனுப்பியது.
இனிவரும் மாதங்களில் அமெரிக்கப் படையினர் அதிக அளவில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் கடந்த மாதம் 26ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரான் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.