ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை – உள்ளுர் மக்களால் சுரண்டப்படும் உழைப்பு : புலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலை!
சவுதி அரேபியாவின் மிகப் பெரிய சுற்றுலா திட்டத்தால் ஏறக்குறைய 21 ஆயிரம் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
£1 டிரில்லியன் பொருட் செலவில் உருவாகி வரும் இந்த திட்டமானது 2030 ஆம் ஆண்டில் நிறைவுபெறும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த NEOM கட்டுமானத்தின் போது 100,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதில் பெருமளவான புலம்பெயர் தொழிலாளர்கள் பங்கு வகிக்கின்றனர். ஏறக்குறைய 13.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 39 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐடிவியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, பட்டத்து இளவரசரின் கனவை நிறைவேற்ற இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் 650 நேபாளத் தொழிலாளர்களின் மரணங்கள் விவரிக்க முடியாதவை என்று கூறுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்வதாகவும் ஒரு வார காலப்பகுதியில் 84 மணிநேரம் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய சட்டம், வாரத்தில் 60 மணி நேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க நேரமின்றி உழைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அந்நாட்டு மக்களால் புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த வேலை நேரம் சர்வதேச குறைந்தபட்ச தரநிலைகள் அனுமதிப்பதற்கு அப்பாற்பட்டவை. உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆழ்ந்த துஷ்பிரயோகம் மற்றும் ஆபத்தான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். துஷ்பிரயோகங்கள் நாடு முழுவதும் திட்டமிட்டு நடக்கின்றன என மனித உரிமைகள் அமைப்பான FairSquare இயக்குனர் Nicholas McGeehan கூறியுள்ளார்.