ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மலேசியர்; 54வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் பணிபுரிந்துகொண்டிருந்த 29 வயது மலேசிய மருந்தாளர், மனச்சிதைவு நோயால் (schizophrenia) பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் நபரால் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
லியோங் கம் சுவான் 2021ஆம் ஆண்டிலிருந்து பொதுச் சுகாதார சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்ததாகவும் அக்டோபர் 23ஆம் திகதி காலை 11.30 மணிவாக்கில் தமது வீட்டில் உயிரிழந்து கிடந்ததாகவும் ஆஸ்திரேலியாவின் ‘7நியூஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
லியோங் வேலைக்குச் செல்லாததைத் தொடர்ந்து, அவரைத் தேடச் சென்ற அவரது சக ஊழியர் அவரை உயிரிழந்த நிலையில் கண்டார்.
சம்பவம் தொடர்பில், வீடற்ற நிலையில் இருக்கும் 54 வயது நபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது. மறுநாள் நீதிமன்றத்தில் அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சைமன் ஹண்ட்டர் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேகப் பேர்வழி, மெல்பர்ன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.
தமது கட்சிக்காரர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் இரண்டு வாரங்களுக்கு அதற்கான மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் வழக்கறிஞர் ஜார்ஜியா கார்வெலா நீதிமன்றத்தில் கூறினார்.
இந்நிலையில், லியோங்கின் முதலாளியான ‘ஈஸ்டர்ன் ஹெல்த்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட் பிளங்கட், லியோங் அவரது தாராளமயமான குணத்திற்கு என்றும் நினைவில் இருப்பார் என்று கூறினார்.
ஹண்ட்டர், அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.