”ஆயுதங்கள் ஓய்வெடுக்கட்டும், அமைதிக்கான நேரம் வந்துவிட்டது” – இத்தாலியில் வீதிக்கு இறங்கிய மக்கள்!
இத்தாலியில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
ரோம், டுரின், மிலன், புளோரன்ஸ், பாரி, பலேர்மோ மற்றும் காக்லியாரி ஆகிய இடங்களில் அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு உறுதியளித்த நூற்றுக்கணக்கான சங்கங்களின் ஆதரவுடன் அமைதிப் பேரணிகள் நடத்தப்பட்டன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் உலகளவில் வளர்ந்து வரும் மோதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் இந்த அணிவகுப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரோமில், சில ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலோசியத்தின் முன் ஒரு மாபெரும் வானவில் கொடியை அசைத்து அணிவகுத்துச் சென்றனர். அவர்களில் முழக்கங்களில் பிரதானமாக ஒலித்தது போர்களை நிறுத்துவோம். இப்போது அமைதிக்கான நேரம் வந்துவிட்டது என்பதுதான்.
“போர் அதிக போரைக் கொண்டுவருகிறது, ஆயுதங்கள் அதிக ஆயுதங்களைக் கொண்டுவருகின்றன. பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திரத்தின் பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் இந்தச் சதுக்கத்தில் இருந்து வரும் செய்தி” என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.