இலங்கைக்கு கிடைக்கும் 3வது கடன் தவணை தாமதமாகலாம் – வொஷிங்டனில் கூறிய மத்திய வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடன் ஒப்பந்தத்தின் 3வது மீளாய்வு தாமதமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அது எப்போது நடக்கும் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடக்குமா என்பது குறித்து காலவரையறை கொடுக்கவில்லை.
வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்கள் இடம்பெற்ற அதேநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கடனாளிகளுக்கும் வெளிநாட்டு கடனாளிகளுக்கும் இடையில் தற்போது பேசப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரக் கடன் கொடுத்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள பாடுபட்டதாக அவர் கூறினார்.
அத்துடன், இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ளதாகவும், கூடிய விரைவில் அது நீக்கப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை எவ்வளவு விரைவாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதைப் பொறுத்தே, 2025ஆம் ஆண்டு இலங்கைப் பொருளாதாரம் சுமார் 3% வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாக வீரசிங்க கூறினார்.