அதிபர் தேர்தல் 2024 : ஹாரிசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பாடகி பியான்சே
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகியான பியான்சே நோல்ஸ், அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
டெக்சஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் அக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற பேரணியில் அவர் உரையாற்றினார்.சக கலைஞர் கெல்லி ரௌலண்டுடன் பியான்சே அந்தப் பேரணியில் மேடையேறிப் பேசினார்.
ஹாரிஸ் அமெரிக்கப் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமை தொடர்பில் நடத்திய பேரணியில் கிட்டத்தட்ட 30,000 பேர் கலந்துகொண்டனர்.
“இங்கு நான் புகழ்பெற்ற நட்சத்திரமாகவோ அரசியல்வாதியாகவோ வரவில்லை. ஒரு தாயாக வந்துள்ளேன்,” என்று கூறிய பாடகி பியான்சே, “உங்கள் சுதந்திரம் என்பது கடவுள் வழங்கிய உரிமை, உங்களுக்கான மனித உரிமை,” என்றார்.
பின்னர் ஹாரிசை அறிமுகப்படுத்தி அவர் பேசினார். பியான்சே 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ‘லெமனேட்’ இசைத்தொகுப்பில் அமைந்துள்ள ‘ஃப்ரீடம்’ பாடல்தான் ஹாரிசின் பிரசாரப் பாடலாக இருக்கிறது.
2020ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலின்போதும் அவர் ஜோ பைடனுக்கும் ஹாரிசுக்கும் இன்ஸ்டகிராமில் ஆதரவு தெரிவித்திருந்தார்.