ஈரான் தூதுவருடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷை இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலில் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையும், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்தும் ஜனாதிபதி திசாநாயக்க தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட அண்மைய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலியுறுத்திய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கைக்கு வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி மற்றும் புதிய முயற்சிகளில் ஆதரவு அளிப்பதில் ஈரானின் உறுதிப்பாட்டை தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.