இலங்கையின் பயண ஆலோசனைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!
அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலைப் பேணுவதற்கான சமீபத்திய பயண ஆலோசனைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வு காணும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரண்டு வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் மியான்மர் தூதுவர் Malar Than Htaik உடனான சந்திப்பின் போது, சர்வதேச சுற்றுலாப்பயணிகள் மற்றும் இலங்கை பிரஜைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். .
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk க்கு இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
இந்த முயற்சிகள், சமீபத்திய பயண ஆலோசனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்த வழிவகுத்தது என்று அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மியன்மார் தூதுவருடன் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென்னாபிரிக்காவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், தென்னாபிரிக்காவின் சமாதானம் மற்றும் தேசிய நல்லிணக்க மாதிரியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஊடாக சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பயண மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.