இந்தியா -பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்களை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்!
தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூர் கடந்த சில ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறிவருகிறது.
கடந்த ஒரு சில நாள்களாக கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், புதன்கிழமை மாலை முதல் சாலைகளில் வாகனங்கள் நிலைக்குத்தி நின்றன. வெறும் 2 கிலோ மீட்டரைக் கடக்க இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆனதாக பல வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிலர் பொறுமை இழந்து வாகனங்களைச் சாலைகளிலேயே விட்டுவிட்டு நடந்து சென்றதாகவும் கூறுகிறார்கள். தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பலரும் வியாழக்கிழமை காணொளி பகிர்ந்துள்ளனர். சிலர் புகைப்படங்களையும் பகிர்ந்து, கெட்ட கனவு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒரு வேளை, அப்பகுதியில் யாருக்காவது மருத்துவ அவசரநிலை தேவைப்பட்டிருந்தால், அவர்கள் பிழைக்கவே வாய்ப்பில்லை என்றும் சிலர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்கள்.
பெங்களூரின் மாடிவாலா மேம்பாலம், வாகன நெரிசலால் சிக்குண்டு காணப்படுவதும் பலரும் காரிலிருந்து இறங்கி நடந்து செல்வதும் காணொளிகளாகப் பரவி வருகின்றன.
மாலை 5.30 மணிக்கு வெளியே வந்த பலரும் இரவு 7 மணி வரை சாலையிலேயே காரில் காத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.