இலங்கை அறுகம்பையில் தாக்குதல் அச்சுறுத்தல்! அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ரஷ்யா கடும் எச்சரிக்கை
அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்வதனை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
அமெரிக்கா
அக்டோபர் 23 காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது .
“அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் விரிகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.”
எப்பொழுதும் உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த எங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றவும் என அமெரிக்க தூதரகம், தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
ரஷ்யா
மேலும் தற்போது அருகம்பே நகரில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ அறிக்கையைத் தொடர்ந்து ரஷ்ய தூதரகம் ரஷ்ய குடிமக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்
இலங்கையின் அறுகம்பை மற்றும் தென் மற்றும் மேல் கடற்கரைப் பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறும், அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் இஸ்ரேலியர்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்த பகுதிகளில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள், இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அல்லது குறைந்தபட்சம் கொழும்புக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இஸ்ரேலின் பாதுகாப்புச் சபை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.