டெஸ்ட் தோல்வி எதிரொலி… – இந்திய அணிக்கு ஏற்பட்ட சிக்கல்?
இந்திய அணி தற்போது நியூஸிலாந்து அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த அக்.-16ம் தேதி அன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் போராடி விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியானது தற்போது இந்திய அணிக்குப் பேரிடியாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி விளையாட வேண்டுமென்றால் குறைந்தது 5 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி ஏற்கனவே வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், அடுத்ததாக இந்திய அணி 3 போட்டிகள் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் நியூஸிலாந்து அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடக் களமிறங்கியது. இந்த தொடரை ‘வைட் வாஷ்’ செய்து இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் எனச் சூழ்நிலை நிலவி வந்தது.
ஆனால், பெங்களூரூவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் வெற்றி சதவீதம் சற்று குறைந்துள்ளது. முன்னதாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் இருந்து வந்த நிலையில், இந்த தோல்வியால் வெற்றி சதவீதம், 68.06 ஆகக் குறைந்திருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா(62.5) 2-வது இடத்திலும், இலங்கை (55.56) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (44.44%) 4-வது இடத்திலும் உள்ளன. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள 2 போட்டிகளையும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் 5 டெஸ்ட் போட்டிகளை வெல்வதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இது ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்தால் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மற்றுமொறு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
இதனால், இந்தியா அணியின் ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தாலும், இந்திய அணி எப்படியாவது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் அக்.-24ம் திகதி புனேவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.