உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் தலைவர்களை சந்திப்பதற்காக திங்களன்று(21) தலைநகர் கீவ் சென்றடைந்துள்ளார் .
நான்காவது முறையாக உக்ரைனுக்கு பாதுகாப்புச் செயலாளராக வந்துள்ளேன், சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை நிரூபிக்கிறேன் என்று ஆஸ்டின் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார் உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதுவர் பிரிட்ஜெட் பிரிங்க் அவரை வரவேற்றபோது, கீவ் வந்தடைந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
உக்ரைன் தலைவர்களைச் சந்திக்க ஆஸ்டின் உக்ரைனுக்கு சென்றதாகவும், “உக்ரைனின் சுதந்திரப் போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாகவும்” அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இப் பயணத்தின் போது, செயலாளர் உக்ரேனிய தலைமையைச் சந்தித்து, போர்க்களத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்க உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டவுள்ளார்.
உக்ரைன் நாட்டில் நிலவி வரும் மோதலில் உக்ரைனின் தற்காப்பு முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் ஆஸ்டின் தனது பயணத்தின் முடிவில் உரை நிகழ்த்துவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.