ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி – மேலதிக விபரங்கள் வெளியாகின
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
இன்று (20) காலை 6 மணியளவில் சிலாபம் சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக சிலாபம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிலாபம் பொலிசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த வீட்டில் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் 51 வயதான எஸ்.ஜி. சேனாரத்ன என்ற வீட்டின் உரிமையாளர், அவரது 44 வயது மனைவி மஞ்சுளா நிரோஷனி மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையறையில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார்.
அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.
சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற இவர்களது மகள் அடுத்த வருடம் பொது தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த வீட்டில் இருந்த சுமார் 25 இலட்சம் தங்க ஆபரணங்கள் காணாமல் போபோனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து யாரும் இல்லாமல் வீட்டில் இருந்த தங்கப் பொருட்கள் மாயமானதும் மர்மமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சடலங்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.