தீவிரக் கண்காணிப்பில் இந்தியத் தூதரக அதிகாரிகள் – வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையுடன் கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியதை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.
அண்மையில் ஆறு இந்தியத் தூதரக அதிகாரிகளை கனடா அரசு கனடாவிலிருந்து வெளியேற்றியது.எஞ்சியுள்ள இந்தியத் தூதர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) கூறினார்.தூதரக அதிகாரிகள் கனடா நாட்டவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது பொறுத்துக்கொள்ளப்படாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, கனடா எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் (சிபிஎஸ்ஏ) அதிகாரி சந்தீப் சிங் சித்து, பஞ்சாப்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கனடாவிடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்ஏ அதிகாரியும் தடைசெய்யப்பட்ட அனைத்துலகச் சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினருமான சந்தீப் சிங் சித்து, பஞ்சாப்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஷௌர்ய சக்ரா விருது பெற்றவரான பல்விந்தர் சிங் சந்து, காலிஸ்தான் போராளிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.அமெரிக்காவிலும் கனடாவிலும் எஸ்எஃப்ஜே சீக்கிய அமைப்பு நடத்திய காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை அவர் எதிர்த்தார்.இதன் காரணமாக அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, கனடாவில் வசிக்கும் 26 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் அவர்களை இதுவரை கனடா அரசாங்கம் நாடு கடத்தவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அண்மையில் தெரிவித்தார்.
தற்போது சந்தீப் சிங் சித்துவின் பெயரும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.