முழங்காலில் வீக்கம்… பண்ட் காயம் குறித்து ரோகித் வெளியிட்ட தகவல்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2-ம் நாளில் போட்டி தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. ஆனால், பவுலிங் வீசிய நியூசிலாந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
முதல் இன்னிங்சில் முடிவில் இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கான்வே 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை 3வது நாள் ஆட்டம் வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
ரிஷப் பண்ட் காயம் – கேப்டன் ரோகித் அப்டேட்
இந்நிலையில், இந்தப் போட்டியின் 37-வது ஓவரில் இந்திய விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்தார். 37வது ஓவரில், ஓவர் த விக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா பந்து வீசிய நிலையில், மிகவும் துல்லியமாக சுழன்ற பந்தை சேகரிக்க முடியாமல் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் காயம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா அப்டேட் கொடுத்துள்ளார். இந்தப் போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், “ரிஷப் பண்ட்டுக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதே முழங்காலில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இந்த போட்டியில் அவர் மீண்டும் வருவார் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2022 டிசம்பரில் நடந்த பயங்கரமான கார் விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். இந்த கோர விபத்தில் அவரது வலது கால் பலத்த காயம் அடைந்தது. இதனையடுத்து அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் பண்ட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்று, தற்போது கிரிக்கெட் ஆடி வருகிறார்.