பிரியாவிடை விழாவுக்கு மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட கேரள மாவட்ட துணை ஆட்சியர்!
வட கேரள மாவட்ட ஆட்சியர் உட்பட சக அதிகாரிகள் கொடுத்த பிரியாவிடை விழாவுக்கு மறுநாள் துணை ஆட்சியர் நவீன் பாபு அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நவீன் பாபு தமது சொந்த மாவட்டமான பத்தனம்திட்டாவில் துணை ஆட்சியர் பொறுப்பை ஏற்கவிருந்த நிலையில், தமது வீட்டில் அக்டோபர் 15ஆம் இகதி காலை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரியாவிடை நிகழ்வுக்கு அழையா விருந்தாளியாக வந்திருந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பி.பி.திவ்யா, பாபு முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார்.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அந்தப் பஞ்சாயத்துத் தலைவர், துணை ஆட்சியர் பாபு செங்கலையில் பெட்ரோல் பங்க் ஒன்றை வைப்பதற்கான அனுமதியை வழங்கப் பல மாதங்களாகத் தாமதித்ததாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அத்துடன், பணி இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் அந்த அனுமதியைத் துணை ஆட்சியர் பாபு வழங்கியதாகவும் திவ்யா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதற்கான காரணத்தையும் தாம் அறிவதாக அவர் கூறினார்.
பிரியாவிடை நிகழ்வில் அனைவரது முன்னிலையிலும் திவ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இன்னும் இரண்டு நாள்களில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது பேச்சை முடித்துக்கொண்ட திவ்யா, நினைவுப்பொருள் வழங்கப்படும் வரை இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அதற்காகக் காத்திருக்கத் தமக்கு விருப்பமில்லை என்று மேடையைவிட்டுப் போய்விட்டார்.இதைத்தொடர்ந்து துணை ஆட்சியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.