டிரம்ப்புக்கு எதிராகச் சதி செய்வதை நிறுத்தவும் ; ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான சதித் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு ஈரானிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்ப் உயிர் மீதான எந்த ஒரு நடவடிக்கையையும், போர் மிரட்டல் விடுக்கும் செயலாக வாஷிங்டன் கருதும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி அக்டோபர் 15ஆம் திகதி தெரிவித்தார்.
மிரட்டல்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அடிக்கடி தகவல் கூறப்பட்டு வருவதாக அதிகாரி கூறினார்.
டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிரான அனைத்து சதித் திட்டங்களையும் நிறுத்துமாறு பைடனின் உத்தரவில், உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குத் தகவல் அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, அமெரிக்க விவகாரங்களில் தான் தலையிடுவதில்லை என்று ஈரான் கூறியுள்ளது. ஆனால், ஈரானின் விவகாரங்களில் அமெரிக்கா பல ஆண்டுகளாக தலையிட்டு வருவதாகச் சுட்டியது.
முன்னதாக, ஈரானிடமிருந்து ஏற்படக்கூடிய மிரட்டல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் டிரம்ப்புக்குத் தெரிவித்ததாக அறியப்படுகிறது. டிரம்ப்புக்கு எதிரான ஈரானிய மிரட்டல்களை அமெரிக்கா பல ஆண்டுகளாக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றும் அமெரிக்கக் குடிமக்கள் யாரேனும் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தினால் ‘கடுமையான விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.