மத்திய கிழக்கு தொடர்பான கவலை ஆசியாவில் நிலவுகிறது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன்
காஸா மக்களின் நிலை குறித்தும் மத்திய கிழக்கில் தொடரும் பூசல்கள் குறித்தும் ஆசியாவில் மிகுந்த கவலை உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
ஆசியான் தலைவர்களுடன் பேசுகையில் மத்திய கிழக்கு தொடர்பான கவலை எதிரொலித்தாக அவர் தெரிவித்தார்.அரசதந்திர உறவுகள் வழி அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முனைவதாக அவர் சொன்னார்.
பூசல்கள் பரவாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.காஸாவில் ஓராண்டுக்கும் மேலாக அவதிப்படும் குழந்தைகள், மகளிர் உள்ளிட்டோரின் நிலை அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாக லாவோசில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டபின் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பிளிங்கன் கூறினார்.காஸா மக்களின் மனிதநேயத் தேவைகளைப் பூர்த்திசெய்வதன் அவசியத்தை இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஆசியான் தலைவர்களுடன் கலந்துரையாடியதாகத் பிளிங்கன் தெரிவித்தார்.தைவானை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் சீனாவை அவர் எச்சரித்தார்.முக்கிய கடல்வழி வர்த்தகத் தடமான தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து சட்டமுறைப்படி கடல்வழிச் சுதந்திரத்தை நிலைநாட்டும் என்றார் அவர்.
சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்கா உரிமை கோரவில்லை என்றாலும் அதன் கடற்படை, விமானப் படைகளை அங்கு நிறுத்தி சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.
தென்சீனக் கடலில் பெரும்பாலான பரப்பளவை சீனா உரிமை கோரும் நிலையில் ஆசியான் நாடுகளான வியட்னாம், பிலிப்பீன்ஸ், மலேசியா, புருணை, தைவான் ஆகியவையும் உரிமை கோருகின்றன.
ஆசியானுடனான உறவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு பிளிங்கன், இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் கவனம் அதிக அளவில் இருப்பதாகவும் அதற்குப் பொருளியல் உறவுகளே மையமாக இருப்பதாகவும் கூறினார்.எதிர்வரும் அமெரிக்கத் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றாலும் அமெரிக்காவின் எதிர்காலம் இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில்தான் உள்ளது என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் பிரதிநிதித்து பிளிங்கன் ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டார்.ஆசியானின் நேரடி முதலீட்டாளர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதைச் சுட்டிய அவர், எதிர்காலம் மீதான ஆழமான நம்பிக்கையையும் உறுதியையும் அது பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகள் வேலை வாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்கக்கூடும் என்றும் இந்த வட்டாரத்தில் 6,200க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இயங்குவதையும் அவர் எடுத்துரைத்தார்.இந்தப் பங்காளித்துவத்தை வளர்ப்பதற்கு அப்பால் அதை நவீனமாக்கவும் அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அமைச்சர் பிளிங்கன்.