தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து மாணவி மரணம் – 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இதுவரை 5 பேரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவியின் பிரேதப் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதுடன், பலத்த காயங்கள் காரணமாகக் குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக அதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் பாடசாலை சீருடையுடன் தாமரை கோபுரத்துக்கு வருகைதந்த குறித்த மாணவி குறுகிய காலத்தில் பல தடவைகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு பிரவேசித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் கீழே குதிப்பதற்கு முயன்றுள்ள காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.
எனினும், மாணவி உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இவர், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனி தெருவிலுள்ள தொடர் மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயதுடைய மாணவன் மற்றும் மாணவியின் நெருங்கிய நண்பி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.