மலேசியாவில் GISB விவகாரத்தில் மீட்கப்பட்ட 622 குழந்தைகளுக்கும் பாதுகாப்பு
குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்சுடன் (ஜிஐஎஸ்பி) இணைக்கப்பட்ட தொண்டு இல்லங்களில் இருந்து மீட்கப்பட்ட 622 குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சரவையின் வாராந்தர கூட்டத்தில் அக்டோபர் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விவகாரத்தை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி மலேசிய அமைச்சரவையில் முன்வைத்தார்.“இந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று ஃபஹ்மி அக்டோபர் 8ஆம் திகதி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
செப்டம்பர் தொடக்கத்தில், ‘ஆப்ஸ் குளோபல்’ என்ற நடவடிக்கையைக் காவல்துறையினர் தொடங்கினர். குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தவறான சமய நடத்தை முதலிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தீபகற்ப மலேசியா முழுவதும் ஜிஐஎஸ்பி உடன் இணைக்கப்பட்ட தொண்டு இல்லங்களைக் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
செப்டம்பர் 30 வரை, ஜிஐஎஸ்பி-ஆல் இயக்கப்படும் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சுமார் 600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு எதிராக 80 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளனர்.எவ்வாறாயினும், மாறுபட்ட போதனைகளை நடைமுறைப்படுத்துகிறதா என்பது உட்பட சர்ச்சைக்குரிய ஜிஐஎஸ்பி தொடர்பான பிற பிரச்சினைகள் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை என்று திரு ஃபஹ்மி கூறினார்.
“இது தொடர்பான கேள்விகள் மாநில முஃப்திகளுக்கு அனுப்பப்பட வேண்டும். எங்களுக்குத் தெரிந்தபடி, ஜிஐஎஸ்பி தொடர்பாக பல முஃப்திகள் ஏற்கெனவே ஃபத்வா வெளியிட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
பல மாநில ஃபத்வா குழுக்கள் ஜிஐஎஸ்பி மற்றும் அதன் துணை நிறுவனங்களை இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து மாறுபட்டவை என்று அறிவித்துள்ளன. அவற்றில் நெகிரி செம்பிலான், பாகாங், சிலாங்கூர், பெர்லிஸ் ஆகியவை அடங்கும் என்று ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.