உக்ரேனின் முக்கிய நகரை நெருங்கிய ரஷ்யப் படைகள்
உக்ரேனின் முக்கிய நகரம் ஒன்றை ரஷ்யப் படைகள் நெருங்கிவிட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொரேட்ஸ்க் புறநகர்ப் பகுதிக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு உக்ரேனின் வுலேடார் நகரை ரஷ்யா கைப்பற்றியது.
“நிலையற்ற சூழல் நிலவுகிறது. நகருக்குள் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் சண்டை தீவிரமடைந்துள்ளது,” என்று உக்ரேனிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உக்ரேனிய நிலப்பகுதியில் ஐந்தில் ஒன்றை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரஷ்யப் படைகள் டொரேட்ஸ்க் நகரை நோக்கி படையெடுத்துள்ளன.வழியில் உள்ள கிராமங்களை அவை படிப்படியாகக் கைப்பற்றின.
குண்டு மழை பொழிந்து ரஷ்யப் படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.ரஷ்யப் படைகளைத் தடுக்க செய்யத்தக்க அனைத்தையும் செய்யும்படி உக்ரேனிய ராணுவத்துக்கு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
டொரேட்ஸ்க் நகரைக் கைப்பற்றினால் டொன்பாஸ் பகுதியைத் தனது கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யாவின் இலக்கு நிறைவடையும் சாத்தியம் அதிகமாகிவிடும் என்று கூறப்படுகிறது.