வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்
ஆரோக்கியமான வாழ்வுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளை சமமாக கொள்ளும் வகையிலான உணவுப் பழக்கவழக்கம் அவசியமாகும்.
மூன்று வேளை உணவிலும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.
அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம். ஏனென்றால், நாள் முழுக்க உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை காலை உணவுதான் அளிக்கும்.
எனவே, உடலுக்கு தேவையான வைட்டமிண்கள், புரதம், ஃபைபர், கனிமங்கள், அமினோ அமிலங்கள், ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிரம்பிய உங்கள் வயிறை ஓரளவு நிறைவாக வைத்துக்கொள்ளும் உணவுகளை காலையில் சாப்பிடுங்கள்.
தயவு செய்து துரித உணவுகளை காலையில் தவிர்த்துவிடுங்கள். காலை உணவை தேர்வு செய்வது என்பது மிக முக்கியம் என்பதை இதன்மூலமே நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்யும் அதே நேரத்தில், எதை எதை தவிர்க்க வேண்டும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் உள்ளிட்டவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி (Nutritionist Sakshi Lalwani). இவர் உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
காபி
காலையில் எழுந்த உடன் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். பால் சேர்த்தது, பால் சேர்க்காமல் கடுங்காபி உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்.
வாழைப்பழம்
காலையில் ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காக நீங்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. இதில் பொட்டாசியம், மேக்னீஸியம், ஃபைபர் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருப்பது உண்மைதான். ஆனால், இதனை நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலின் ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமாக மேக்னீஸியம் மற்றும் பொட்டாஸியத்தின் அளவு அதிகரித்துவிடும். இது இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை செலுத்தும்.
பச்சை காய்கறிகள்
நீங்கள் அதிக ஃபைபரை கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது மூலம் வயிற்றில் உப்புசம் மற்றும் வாயு தொல்லையை உணர்வீர்கள். எனவே, காலையில் காய்கறிகளை பச்சையாக சாப்பிடாமல் அவற்றை வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவது நல்லது.
யோகர்ட்
கட்டித்தயிர் அல்லது யோகர்ட்டை காலை உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். இதில் இருக்கும் நுண்ணுயிர்கள் வயிற்றுக்கு நல்லது. ஆனால், வெறும் வயிற்றில் ஆசிட் நிறைந்திருக்கும் என்பதால் இவை யோகர்ட்டில் உள்ள நுண்ணுயிர்களை சிதைத்துவிடும். எனவே, இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே வேண்டாம்.
தக்காளி
தக்காளியில் அதிக டேனிக் அமிலங்கள் இருக்கின்றன. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆசிடிட்டியை அதிகரிக்கச் செய்யும்.