கனடாவில் மூன்று நாட்களில் மூன்று கொலைகள் – தொடர் கொலையாளியை கைது செய்த பொலிஸார்
கனடாவில் தொடர் கொலையாளி என்று காவல்துறை வகைப்படுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூவரைக் கொன்றதன் தொடர்பில் அவர் மீது வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டொரொன்டோ, நயாகரா ஃபால்ஸ், ஹேமில்டன் ஆகிய நகரங்களில் அவர் அந்தக் கொலைகளைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
அந்தக் கொலைச் சம்பவங்கள் இம்மாதம் ஒன்றாம் திகதிக்கும் மூன்றாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தன.“அவர் ஒரு தொடர் கொலையாளி,” என்று நயாகரா காவல்துறைத் தலைவர் பில் ஃபோர்டி செய்தியாளர்களிடம் கூறினார்.
சந்தேக நபரான 30 வயது சப்ரினா காவ்ல்தார், டொரொன்டோவின் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார். டொரொன்டோ வீட்டில் 60 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது, நயாகரா ஃபால்ஸ் பூங்காவில் 47 வயது நபர் கொலை செய்யப்பட்டது, ஹேமில்டன் நகரில் உள்ள வாகன நிறத்துமிடத்தில் 77 வயது நபர் கொலை செய்யப்பட்டது ஆகியவற்றின் தொடர்பிலபான கொலைக் குற்றச்சாட்டுகளை சப்ரினா காவ்ல்தார் எதிர்நோக்குகிறார்.
சந்தேக நபர், ஹேமில்டன், நயாகரா ஃபால்ஸ் நகரங்களில் திட்டமின்றி எவரையேனும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. டொரொன்டோவில் கொல்லப்பட்ட பெண், சப்ரினா காவ்ல்தாருக்குத் தெரிந்தவர் என்று விசாரணை நடத்தும் அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.