தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
தாய்லாந்தில் அக்டோபர் 1ஆம் திகதி தீப்பிடித்துக்கொண்ட பேருந்து ஒன்றில் இருந்த 20 பிள்ளைகளும் மூன்று ஆசிரியர்களும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பேருந்தின் உரிமையாளர், வியாழக்கிழமை (அக்டோபர் 3) இறுதிச்சடங்கிற்குச் சென்றார்.
இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு, விபத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அவர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினார்.
‘சினாபுட் துவர் கம்பெனி’ உரிமையாளரான சோங்விட் சினாபுட், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 பாட் (S$1,960) இழப்பீடு தந்தார்.
தாய்லாந்தின் வட மாநிலமான உத்தாய் தானியில் உள்ள வாட் காவோ பிராயா சங்காராம் பள்ளி, சுற்றுலா ஒன்றுக்காக சோங்விட்டின் நிறுவனத்திடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுத்தது.
வருங்காலத்தில் கூடுதல் இழப்பீடு வழங்கவும் உறுதிபூண்ட சோங்விட், மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்றுவரும் மூன்று மாணவர்களுக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிக்கப் போவதாகச் சொன்னார்.
இந்நிலையில், இறந்த 23 பேரின் உடல்கள் பள்ளியின் அரங்கில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் உறவினர்கள், நண்பர்களால் அரங்கம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நிரம்பி வழிந்தது.
சிறுவயது பிள்ளைகளின் சவப்பெட்டிகள் அருகே விளையாட்டுப் பொருள்கள், சிற்றுண்டிகள், உணவு, பிடித்தமான உடைகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.