தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் ; 100க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேற்றம்
வட தாய்லாந்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரபல யானைக் காப்பகம் ஒன்றிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.சில யானைகள் இன்னும் அங்குச் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபேஸ்புக்கில், ‘எலிஃபன்ட் நேச்சர் பார்க்’ பதிவேற்றம் செய்த புகைப்படம் ஒன்றில், ஒன்றாக நின்றுகொண்டிருக்கும் மூன்று யானைகளைக் காணமுடிகிறது. அவற்றின் உடல்கள் பாதி அளவுக்கு பழுப்பு நிற, சேறு கலந்த நீரில் மூழ்கியிருப்பதையும் பார்க்கமுடிகிறது.
உள்ளூர் ஊடகத்தை மேற்கோள்காட்டி, நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களும் தொண்டூழியர்களும் 117 யானைகளைப் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்குக் கொண்டுசென்றுவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.
“யானைகளின் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் செய்திருக்கும் ஆகப் பெரிய வெளியேற்ற நடவடிக்கை இது,” என்று பூங்காவின் நிறுவனர் ‘சிஎன்என்’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நீர்நிலை அதிகரித்துவருவதால் உடனடி உதவி வேண்டும் என்று அவர் தாய்லாந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.