தெலுங்கானா அமைச்சர் மீது புகார் அளித்த நாகார்ஜுனா
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீது நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி புகார் அளித்துள்ளார்.
தனது மகன் நாக சைதன்யா மற்றும் அவரது முன்னாள் மனைவி சமந்தா விவாகரத்து பெற்றது குறித்து சில தரக்குறைவான விஷயங்களை பொது வெளியில் பேசி இருந்தார் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. நாகார்ஜுனா அவரது கருத்துக்கள் தங்கள் குடும்பத்தின் நற்பெயரை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் இப்படி கூறியது தவறு என்றும், இதனால் தனக்கு அவ பெயர் ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதற்காக நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, பிஆர்எஸ் தலைவர் கேடிஆருக்கு சில மோசமான விஷயங்களில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார். போதைப்பொருள் கும்பலை கேடிஆருக்கு தெரியும் என்றும், நாக சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகிய இரு திரைப்பட நட்சத்திரங்கள் பிரிந்ததில் அவருக்கும் பங்கு உண்டு என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
தெலுங்கு திரையுலகில் உள்ள பல பெண் நடிகர்கள் கே.டி.ஆரின் மோசமான சில செயல்கள் காரணமாக தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இதுமட்டுமின்றி கேடிஆர், சமந்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு நாகார்ஜுனாவிடம் கேட்டதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு நாகார்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்தார். அவரது கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை. அனைவரின் தனியுரிமையை மதித்து பேசுங்கள் என்று அமைச்சரை வலியுறுத்தினார்.
“மாண்புமிகு அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் ஈடுபட விரும்பாத சினிமா நட்சத்திரங்களைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை இருக்க வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும்” என்று நாகார்ஜுனா ட்வீட் செய்துள்ளார்.
பிரபல ஜோடியாக இருந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2021ம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்தனர். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலா என்ற மற்றொரு நடிகையுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.