இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை – சோதிடரின் அதிர்ச்சி செயல்
பல பெண்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய ஜோதிடர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சந்தேக நபர் தற்போது மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பண மோசடி தொடர்பான வழக்கொன்றில் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை நீதிவான் கவனத்தில் கொண்டே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபரையே நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பேஸ்புக் ஊடாக சோதிடம் பார்ப்பதாக கூறி பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ள இந்த சோதிடர் அதனை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை நீக்குவதற்கு பெண்களிடம் கப்பமாக அவர் பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.