மத்திய கிரேக்க பிராந்தியத்தில் காட்டுத்தீ: இருவர் பலி
மத்திய கிரீஸ் பிராந்தியமான கொரிந்தில் உள்ள கரடுமுரடான மலைப் பகுதிக்கு அருகே பலத்த காற்றினால் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ஒன்பது விமானங்களின் உதவியுடன், ஏதென்ஸுக்கு மேற்கே 120 கிமீ (75 மைல்) தொலைவில் உள்ள பெலோபொன்னீஸ் தீபகற்பத்தில் உள்ள சைலோகாஸ்ட்ரோ என்ற கடலோர நகரத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை வெடித்த தீயை எதிர்த்துப் போராடினர்.
தீயினால் பல கிராம மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மீட்கப்பட்ட உடல்கள் கடுமையாக எரிந்திருந்த நிலையில், அவற்றை அடையாளம் காண ஆய்வக சோதனைகள் அவசியம் என்றும் கிரேக்க காவல்துறை செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டினா டிமோக்லிடோ கூறினார்.
தீயணைப்புப் படை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கிரேக்க குடிமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.