நேபாளம் நிலச்சரிவு – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : தொடரும் மீட்பு பணிகள்!
நேபாளத்தில் வார இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்பு பணிகள் இன்றும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் இருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் குறைந்தது மூன்று பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் புதையுண்டன. தற்போது வரையில் 31 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக முகாம்கள் கட்டப்படும் என்றும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பண உதவி வழங்கப்படும் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.
சாலைகளில் இருந்து நிலச்சரிவுகளை அகற்ற கனரக உபகரணங்களைப் பயன்படுத்திய அதே வேளையில், பொலிஸாரும் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு நேபாளம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதாக அரசு அறிவித்தது.