நஸ்ரல்லாவை கொன்றதன் மூலம் கணக்கு தீர்ந்து விட்டது ; பிரதமர் நெதன்யாகு
ஹிஸ்புல்லா தலைவரைக் கொன்றதன் மூலம் கணக்கைத் தீர்த்துவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
பெய்ரூட்டில் சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமைச் செயலாளரான ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.அதன் பிறகு அறிக்கை வெளியிட்ட நெட்டன்யாகு, “ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களையும் பல்வேறு வெளிநாட்டவரையும் கொன்று குவித்ததற்குப் பொறுப்பானவரைக் கொன்றதன் மூலம் கணக்கைத் தீர்த்துவிட்டோம்,” என்றார்.
1983ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவுபடுத்தி அவர் அவ்வாறு தெரிவித்தார்.அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தில் இருந்த 63 பேரும் படைமுகாம்களில் இருந்த அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த 241 பேரும் 58 பிரெஞ்சுப் படையினரும் கொல்லப்பட்டனர்.
“நஸ்ரல்லாவைக் கொல்ல உத்தரவிட்டேன். இப்போது அவர் உயிருடன் இல்லை.“இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு எதிரான போரில் வரலாற்றுபூர்வ திருப்புமுனையை அடைய வேண்டும் என்னும் உயரிய இலக்கைச் சாதித்து உள்ளது,” என்று நெதன்யாகு தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
ஏறத்தாழ ஓராண்டாக நீடிக்கும் காஸா போர் தொடர்பான நெதன்யாகுவின் கொள்கை மீது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறைகூறல்கள் அதிகரித்து வருகிறது. இவ்வேளையில், இஸ்ரேல் தனது இலக்கை எட்ட ஹிஸ்புல்லா தலைவரைக் கொல்வது அவசியம் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
“நாம் வகுத்த இலக்கை அடையவும் வடபகுதிக் குடியிருப்பாளர்கள் தங்களது இல்லத்துக்குப் பாதுகாப்பாகத் திரும்பவும் இந்த நஸ்ரல்லாவைக் கொல்வது அவசியம்.“அவரை ஒழிப்பது, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் இகதி ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலின்போது பிணை பிடித்து காஸாவில் சிறை வைத்திருப்போரை மீட்பதற்கும் உதவும்,” என்று நெதன்யாகு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
2006ஆம் ஆண்ட இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் இடையே நடந்த போரில் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக வதந்திகள் எழுந்தன ஆனால் எவ்விதப் பாதிப்புமின்றி நஸ்ரல்லா உயிருடன் இருப்பது பின்னர் தெரியவந்தது.