தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு திலும் அமுனுகம கண்டனம்
காலி முகத்திடலில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, இந்த வாகனங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டவை என தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும், அவை தற்போது காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன் கேலி செய்வது ஏற்கத்தக்கது, ஆனால் பதவியேற்ற பிறகு அவ்வாறு செய்வது ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.
மேலும், வாகனங்கள் திருடப்பட்டால், அது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் என்றும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வமாக கையளிப்பதை தவறாக பயன்படுத்துவதாக கருத முடியாது.
தற்போதைய அரசாங்கம் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வேலை செய்ய உத்தேசித்துள்ளதாயின், தமது விருப்பத்திற்கேற்ப அதனைச் செய்வதற்கு சுதந்திரம் இருப்பதாகவும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்த்தால், அதற்கு இணங்க முடியும். எனினும், கடந்த அரசாங்கங்களின் போது, பொதுமக்களிடம் அவ்வாறான எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக வாகனங்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் இல்லை என்பதற்காக அவற்றை காட்சிப்படுத்துவது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.