வெளியில் இருந்து வாங்கப்படும் பிரசாதங்களுக்கு தடை விதித்த லக்னோ கோயில்
திருப்பதி லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், லக்னோவில் புகழ்பெற்ற மாங்காமேஷ்வர் கோவிலில் பக்தர்கள் வெளியில் இருந்து வாங்கும் பிரசாதம் வழங்க தடை விதித்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரசாதம் அல்லது பழங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் கலப்படம் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்படுவது மன்னிக்க முடியாத குற்றம் என்று மங்காமேஷ்வர் கோவிலின் மஹந்த் தேவ்ய கிரி தெரிவித்தார்.
“ஆந்திராவின் திருப்பதி கோவிலில் கலப்படம் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் வழங்கும் பிரசாதத்தில் அசைவ பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பக்தர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
“இதற்காக, பக்தர்கள் வீட்டில் நெய் அல்லது உலர் பழங்கள் கொண்டு செய்யப்பட்ட பிரசாதத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம், இல்லையெனில் பழங்களை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சில சிரமங்களை ஏற்படுத்துகிறது என்றாலும், கோவிலின் புனிதத்திற்கு முன் அனைத்தும் அற்பமானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
“கோவிலில் அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது மிகப் பெரிய சம்பவம். சனாதன தர்மத்திற்கு இதைவிட பெரிய அடி இருக்க முடியாது. எனவே, அனைத்து இந்து கோவில்களின் நிர்வாகிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும். சைவ பிரசாதம் கொடுங்கள்” என தெரிவித்தார்.