தென்கொரியாவில் போராட்டத்தில் பங்கேற்காதோரின் பட்டியலை வெளியிட்ட பயிற்சி மருத்துவர் கைது
தென்கொரியாவில் நடந்து வரும் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்களின் பட்டியலை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படும் பயிற்சி மருத்துவர் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 20) கைது செய்யப்பட்டார்.இத்தகவலை அந்நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்தன.
கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக தென்கொரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு பயிற்சி மருத்துவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
வேலைக்குத் திரும்பிய அல்லது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத சக மருத்துவர்களின் பெயர்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலை உருவாக்கி, அதைத் தீங்கிழைக்கும் நோக்கத்தோடு ‘டெலிகிராம்’ போன்ற சமூக ஊடக செயலிகள் மூலம் மற்றவர்களுக்கு அந்தப் பயிற்சி மருத்துவர் அனுப்பியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தென்கொரியாவின் முன்னணி மருத்துவர் அமைப்பான கொரிய மருத்துவச் சங்கத்தின் தலைவர், செப்டம்பர் 21ஆம் திகதி சோலில் உள்ள காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயிற்சி மருத்துவரைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிலைமைக்கு அரசாங்கமே காரணம் எனச் சாடினார்.“அந்தப் பட்டியலில் உள்ள அனைவரும், கைது செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்றே நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.