ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த கார்கிவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம்; 12 பேர் காயம்
ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரேனின் கார்கிவ் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் சேதமடைந்ததாகவும் அதில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாகவும் அந்நகரின் மேயர் இஹோர் டெரெகோவ் தெரிவித்தார்.காயமடைந்தோரில் ஒரு சிறுவரும் அடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் உக்ரேனிய நேரப்படி செப்டம்பர் 21ஆம் திகதி மாலை நிகழ்ந்தது.
கட்டடம் தாக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.கட்டடத்தின் பல கண்ணாடிச் ஜன்னல்கள் சிதறியதாகத் தெரிவிக்கப்பட்டது.மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் டெரெகோவ் கூறினார்.
ரஷ்யப் படைகள் வீசிய குண்டு கட்டடத்தின் வாசலுக்கும் முன் இருந்த மரத்தின் மீது விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.குண்டு வெடித்ததில் அங்கிருந்த பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
ரஷ்யா-உக்ரேன் போர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கார்கிவ் நகர் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 20ஆம் திகதியன்று கார்கிவ் நகர் மீது ரஷ்யப் படைகள் மூன்று தாக்குதல்களை நடத்தின.இதில் 15 பேர் காயமடைந்தனர்.