இலங்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான முறையில் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குவார்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான முறையில் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை அமைப்பதற்கும், தலைவர்களை தெரிவு செய்வதற்கும் நாங்கள் இதுவரை தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஆனால், இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றியின் பின்னர் எவ்வித அத்துமீறல்களுக்கும், மோதல்களுக்கும் ஆளாகாமல் அமைதி காக்குமாறு திஸாநாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அனைவருக்கும் அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை நாம் நிலைநாட்ட வேண்டும். நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் தேவை” என்றார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜனாதிபதி ஜனநாயக முறைப்படி அதிகாரத்தை மாற்றுவார். ஜனநாயகத்திற்கு எதிராக அவர் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரத்தை மாற்றிவிட்டு ஓய்வு பெறுவார் என நம்புகிறேன்” என்றார்.