அமெரிக்க தேர்தல் 2024 : ஆகஸ்ட் மாதம் ட்ரம்பை விட மும்மடங்கு செலவு செய்த ஹாரிஸ் பிரசாரக் குழு
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான கமலா ஹாரிசின் பிரசாரக் குழு, கடந்த ஆகஸ்ட் மாதம், டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழு செலவிட்டதில் ஏறக்குறைய மும்மடங்கு செலவு செய்ததாகத் தெரியவந்துள்ளது.வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட நிதித் தகவல்கள் இதைத் தெரிவித்தன.
இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் இகதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் வேளையில் இரு குழுக்களுமே இறுதிக்கட்ட பிரசாரத்தில் முனைந்துள்ளன.
துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், ஜூலை மாதம் தமது பிரசாரத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் தமது பிரசாரக் குழு 174 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்ததாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப், ஆகஸ்ட் மாதம் தமது பிரசாரக் குழு 61 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்ததாகக் கூறியுள்ளார்.
ஹாரிஸ் தரப்பின் நிதி நிலைமை வலுவாக இருப்பதால் தொலைக்காட்சி விளம்பரச் செலவுகளுக்கு அது உதவும் என்றபோதும் வெற்றிக்கு அது வழிவகுக்குமா என்பது சந்தேகமே.
2016ஆம் ஆண்டிலும் ஜன நாயகக் கட்சியினரைவிடக் குறைவான நிதியைத் திரட்டிய டிரம்ப், ஹில்லரி கிளின்டனைத் தோல்வியுறச் செய்தார்.
ஹாரிஸ், டிரம்ப் இருவருமே ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலும் விளம்பரங்களுக்கும் சிறிதளவு பேரணிகள், பயணங்கள், பிரசாரக் குழுவினரின் ஊதியம் ஆகியவற்றுக்கும் செலவிட்டதாகக் கூறியுள்ளனர்.