INDvsBAN Test – 2ம் நாள் முடிவில் 308 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வினின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா (5) துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா அணியில் சுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது, நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.