வட கொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்ட குப்பை பலூன் தீப்பற்றியதால் அதிர்ச்சி
வட கொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்ட குப்பை பலூனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த குப்பை பலூன் சோலில் உள்ள ஒரு கட்டடத்தின் கூரையில் விழுந்து தீப்பற்றியது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் அந்தச் சம்பவம் நடந்ததாக காங்சியோ (Gangseo) தீயணைப்பு நிலையம் கூறியது.
18 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. அதில் 15 வண்டிகளும் 56 ஊழியர்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவருக்கும் காயமில்லை. தீப்பிடித்தக் குப்பை பலூனைச் சேகரித்த ராணுவ, காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
குப்பைகள் நிறைந்த 120 பலூன்களை வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்தது. சனிக்கிழமையும் அத்தகைய 50 பலூன்கள் அனுப்பப்பட்டன.
அவற்றுடன் இணைக்கப்பட்ட பைகளில் பெரும்பாலும் தாள்களும் பிளாஸ்டிக் கழிவுகளும் இருப்பதாகவும் அவை மக்களுக்கு ஆபத்து விளைவிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலடியாக, பியோங்யாங்குடனான ராணுவ ஒப்பந்தத்தைச் சோல் ரத்துச் செய்துள்ளது.
எல்லையோரம் ஒலிப்பெருக்கிகளில் பிரச்சாரத்தை ஒலிக்கவிடுவதையும் அது மீண்டும் தொடங்கியது.