பயனர்களை ஏமாற்றுவதாக இணைய விளையாட்டு நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஆணையகத்தில் புகார்
இணைய விளையாட்டு நிறுவனங்கள் சிறார்கள் உட்பட அதன் பயனாளர்கள் அனைவரையும் வேண்டுமென்றே விளையாட்டில் அதிகச் செலவு செய்யத் தூண்டி, அவர்களை ஏமாற்றுவதாக வியாழக்கிழமையன்று ஐரோப்பியப் பயனீட்டாளர் குழுக்கள் குற்றம் சாட்டின.
ஐரோப்பாவில் இணைய விளையாட்டுகள் பிரபலமாக உள்ளதாகவும் ஐரோப்பிய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இணைய விளையாட்டாளர்கள் என்றும் ஆகஸ்ட் மாதம் வெளியான தொழில்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவின் பிஇயுசி பயனீட்டாளர் உரிமைகள் குழுவானது, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிஇயுசி குழுவில் உறுப்பினராக இருக்கும் அமைப்புகளின் ஆதரவுடன் ஐரோப்பிய ஆணையத்திடம் செப்டம்பர் 12ஆம் திகதி புகார் அளித்தது.
ஃபோர்ட்நைட் , இஏ ஸ்போர்ட்ஸ் ஃஎப்சி 24, மைன்கிராஃப்ட் போன்ற இணைய விளையாட்டு நிறுவனங்கள், மெய்நிகர் நாணயங்கள் எனும் போர்வையில் அதன் பயனாளர்களை விளையாட்டில் சூழ்ச்சியாகப் பணத்தைச் செலவுசெய்யத் தூண்டுகிறார்கள் என அந்தக் குழு ஐரோப்பிய ஆணையத்திடம் அளித்த புகாரில் தெரிவித்தது.
இதனால், சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அக்குழு அதில் குறிப்பிட்டது.
மெய்நிகர் பணம் என்பது மின்னிலக்கப் பொருள்களான ஆபரணக் கற்கள், புள்ளிகள், நாணயங்கள் போன்றவை. அவற்றை உண்மையான பணத்தைக் கொண்டு வாங்கலாம்.