வியட்னாமில் யாகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141ஆக அதிகரிப்பு!
வியட்னாமில் யாகி புயலால் மாண்டோர் எண்ணிக்கை 141ஆக அதிகரித்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் சிவப்பு ஆற்றில் நீர்மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதாக செப்டம்பர் 11ஆம் திகதி அது எச்சரித்தது.தலைநகர் ஹனோயில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.
யாகி புயலால் கனமழை பெய்த வேளையில் வியட்னாமின் வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளாலும் வெள்ளத்தாலும் 141 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 59 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டடங்கள் பலத்த சேதத்துக்குள்ளானதாகவும் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹனோயில் பாயும் சிவப்பு ஆற்றில் மணிக்கு 10 செ.மீ. அளவு நீர்மட்டம் உயர்வதாக செப்டம்பர் 10ஆம் திகதி மாலை வெளியான அரசாங்க ஊடக அறிக்கைகள் கூறின.
வெள்ள அபாயத்தை முன்னிட்டு, ஹனோயில் உள்ள சில பள்ளிகள் இந்த வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும்படி மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.