உக்ரேன் மீது ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இருவர் மரணம்
உக்ரேனின் சுமி பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் நால்வர் காயமுற்றதாகவும் வடகிழக்கு உக்ரேனின் ராணுவ நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) தெரிவித்தது.
காயமுற்றவர்களில் இருவர் சிறுவர்கள் என டெலிகிராம் செயலியில் அது கூறியது. பல்வேறு குடியிருப்புகளும் கார்களும் சேதமுற்றதாகவும் அது சொன்னது.
இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யாவிடமிருந்து கருத்து வெளிவரவில்லை.
ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி, ரஷ்யப் படைகளால் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது. மாறாக, உக்ரேனின் போர் முயற்சிகளுக்கு முக்கியமான உள்கட்டமைப்புகளை அழிப்பதையே தனது தாக்குதல்கள் இலக்கு கொண்டிருப்பதாக ரஷ்யா கூறி வருகிறது.
2022 பிப்ரவரியில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான குடிமக்கள் போரில் இறந்துவிட்டனர். மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.