அமெரிக்கா- கென்டக்கி நெடுஞ்சாலை துப்பாக்கிச்சூடு: அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள இனர்டர்ஸ்டேட் -75 நெடுஞ்சாலையில் துப்பாக்கிக்காரர் ஒருவர் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தாக்குதல் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கென்டக்கி மாநிலத்தின் லண்டன் நகர மேயர் ரென்டல் வெடல் தெரிவித்தார்.காயமடைந்தோர் தொடர்பாக அமெரிக்கக் காவல்துறை கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வனப்பகுதி அல்லது மேம்பாலத்தில் அந்தத் துப்பாக்கிக்காரர் மறைவாக இருந்து அங்கிருந்து பலரைக் குறிவைத்துத் துப்பாக்கியால் சுடுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துப்பாக்கிக்காரர் இன்னும் பிடிபடவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
எனவே, அப்பகுதியில் இருப்போர் தங்கள் வீட்டின் கதவுகளைப் பூட்டி வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.அவரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இந்நிலையில், சந்தேக நபரின் படத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அவர் 32 வயது ஜோசஃப் ஏ கவுச் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் ஆயுதம் வைத்திருப்பதாகவும் மிகவும் அபாயகரமானவர் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் அமெரிக்க நேரப்படி செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி மாலை 6 மணி அளவில் தொடங்கியதாக லோரல் கவுன்ட்டி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது தோட்டாக்கள் பாய்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலையில் உள்ள நுழைவாயில் 49ஐ தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.