வாயடைக்க டிரம்ப் பணம் கொடுத்த வழக்கு: அதிபர் தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பு
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம்முடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதைத் தெரிவிக்காமல் இருக்க ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்குப் பணம் தந்தது குறித்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 26ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்காகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, செப்டம்பர் 18ஆம் திகதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
“இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்று என அனைவரும் உணர்ந்ததால், தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை!,” எனத் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர் என்றும் அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் நீதிபதி மெர்சன் தனது முடிவு குறித்து எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.