அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீட்டை எதிர்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முடிவுகளை மாற்றலாம் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.செப்டம்பர் 4ஆம் திகதி ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா விவரித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி இணையத் தளங்களின் வழியாக வாக்காளர்களின் கவனத்தைத் திசை திருப்ப ரஷ்யா முயற்சி செய்யக்கூடும்.இதனால் ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது, குற்றம்சாட்டுவது, இணையத் தளங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனை நியாயப்படுத்தும் வகையில் தவறான தகவல்களை அமெரிக்க தேர்தலின்போது ரஷ்யா பரப்பலாம் என்று சொல்லப்படுகிறது.
ரஷ்ய மாநில ஒளிபரப்பு நிறுவனமான ‘ஆர்டி’யின் இரண்டு ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்றும் தலைமைச் சட்ட அதிகாரியான மெரிக் கார்லாண்ட் கூறினார்.இரு ஊழியர்களும் டென்னசியில் உள்ள அலுவலகத்தின் வழியாக தவறான உள்ளடக்கங்களை பரப்புவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசியலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை அமெரிக்க மக்கள் அறிந்துகொள்ள உரிமையிருக்கிறது என்றார் கார்லாண்ட்.
ரஷ்யாவின் லாபநோக்கமற்ற நிறுவனமான ‘ஏஎன்ஓ டயாலாக்’ மீது அமெரிக்காவின் கருவூலத் துறையும் தடை விதித்துள்ளது. அதுதான் ‘டாப்பிள்காங்கர்’ எனும் ரஷ்யாவின் ஆதிக்கத்தைச் செலுத்த உதவும் கட்டமைப்புக்கு உதவி வருகிறது.இதற்கிடையே அமெரிக்க அரசாங்கம், அதிபர் தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு சக்திகளைப் பற்றி தகவல் கொடுத்தால் பத்து மில்லியன் டாலர் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.குறிப்பாக ‘RaHDit’ என்ற ரஷ்ய ஊடுருவல் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு தேடி வருகிறது.