இரண்டு டாப் தமிழக வீரர்களை குறி வைத்த சிஎஸ்கே
2025 ஐபிஎல் தொடர் தொடருக்கு முன் நடக்க உள்ள மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முக்கிய தமிழக வீரர்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரார் கூட இடம் பெறவில்லை என்பது தமிழக ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது அந்த குறையைப் போக்கும் வகையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் இரண்டு தமிழக வீரர்களை வாங்க முடிவு செய்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அந்த இரண்டு வீரர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று வந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
அஸ்வின் சில வாரங்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்பாட்டு திறன் பயிற்சி மையத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அவர் தனது ஐபிஎல் பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் பெற்றிருந்த அஸ்வின் அந்த நிறுவனத்தின் சார்பில் தமிழக அளவிலான டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அங்கே இருந்து தான் அவர் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார்.
அஸ்வினுக்கு பல்வேறு நிலைகளிலும் வாய்ப்பு அளித்து வளர்த்து விட்டவர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் மற்றும் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இடையே அவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விட்டு விலகி வேறு நிறுவனத்துடன் இணைந்தார்.
தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியுடன் தனது நட்பு உறவை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் அஸ்வின்.
அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த சிஎஸ்கே நிர்வாகம் அவரை சிஎஸ்கே அணியின் உயர் செயல்பாட்டு திறன் மையத்தின் தலைமை அதிகாரியாக நியமித்து இருக்கிறது.
விரைவில் தோனி சிஎஸ்கே அணியிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் அஸ்வின், சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் இணைந்து இருக்கிறார்.
அஸ்வின் இப்போதும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் என்பதால் 2025 ஐபிஎல் தொடரில் அஸ்வினை வாங்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அவர் சிஎஸ்கே அணியின் பொறுப்பில் இருப்பதால் மற்ற அணிகள் அவரை ஏலத்தில் வாங்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, சிஎஸ்கே அணி அவரை எளிதாக ஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரைத் தவிர்த்து சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரையும் சிஎஸ்கே அணி வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் பெற்று இருக்கும் அனுபவ சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்.
அவரது இடத்தை நிரப்ப அனுபவம் வாய்ந்த ஒரு ஆல் ரவுண்டர் தேவை. அதை பூர்த்தி செய்யவே வாஷிங்டன் சுந்தரை வாங்க சிஎஸ்கே முடிவு செய்து இருக்கிறது.