ஜெர்மனியில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து சம்மவம் ; ஐவர் காயம்!
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்துள்ளது.
அந்தத் தாக்குதலில் ஐவர் காயமுற்றனர். சீகன் நகரில் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அச்சம்பவம் பயங்கரவாதச் செயல் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று உள்ளூர் காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
சந்தேக நபரான 32 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
ஜெர்மனியின் சொலிங்கன் நகரில் சென்ற வாரம் மூவரைப் பலிவாங்கிய கத்திக்குத்துச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு சில நாள்களே கடந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சொலிங்கன் தாக்குதலைத் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள், தொலைதூரம் போகும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றில் கத்தி ஏந்திச் செல்வதன் தொடர்பில் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸின் தலைமையிலான ஜெர்மனி அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
சீகன் பேருந்துக் கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த ஐவரில் மூவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்றும் ஒருவர் மோசமான காயங்களுக்கு ஆளாகியிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 27) சொலிங்கனுக்கு அருகே உள்ள மோவெர்ஸ் நகரில், வழிப்போக்கர்களைக் கத்தியால் தாக்கியதாக நம்பப்பட்ட நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.