பிலிப்பீன்ஸ், வியட்னாம் இடையே பாதுகாப்பு உடன்படிக்கை
பிலிப்பீன்சும் வியட்னாமும் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.தென்சீனக் கடலில் சீனாவின் செயல்களுக்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்துவரும் அவ்விரு நாடுகளும் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கை அது என்றார் அவர்.
வியட்னாமியத் பாதுகாப்பு அமைச்சர் ஃபான் வான் கியாங், ஃபிலிப்பீன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடொரொவுடன் பேச்சு நடத்த வெள்ளிக்கிழமை மணிலாவில் இருந்தார். அதற்கு முன்னர் அவர் மார்கோசையும் சந்தித்தார்.
“இப்போது நாம் தற்காப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம் ஆகியவற்றைப் பற்றிப் பேச்சு நடத்துகிறோம்,” என்று மார்கோஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.இருப்பினும், பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
தென்சீனக் கடலில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், உடன்படிக்கை இடம்பெறுகிறது.
பதற்றநிலை அதிகரிப்பு குறித்தும், சீனா அதன் அண்டைநாடுகளின் பொருளியல் பகுதிகளில் அதிகமான கடலோரக் காவற்படையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது பற்றியும் அனைத்துலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில், அதன் அண்டை நாட்டுடன் அணுக்கமான உறவைக் கட்டிக்காப்பதற்கான தேவையும் வியட்னாமுக்கு உள்ளது.
தென்சீனக் கடலின் தொடர்பில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் பிலிப்பீன்சுக்கும் சீனாவுக்கும் இடையே பூசல் நிலவிவரும் வேளையில், உடன்படிக்கையைச் செய்துகொள்ள வியட்னாம் முடிவெடுத்துள்ளது. உத்திபூர்வ நீர்நிலைகளில் கிட்டத்தட்ட அனைத்துக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது.
தென்சீனக் கடலில் உள்ள ‘ஸ்பிராட்லி’ தீவுகளுக்கு வியட்னாமும் பிலிப்பீன்சும் உரிமை கோரிவந்துள்ளபோதும், அவ்விரு நாடுகளும் பூசல்களைக் கையாண்டு இணைந்து செயல்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.