அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் IVF செலவுகளை ஏற்றுக்கொள்ள உறுதிகூறிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் தமது அரசாங்கமோ காப்பீட்டு நிறுவனங்களோ ஏற்கும் என்று கூறியுள்ளார்.
பெண்களையும் புறநகர்ப் பகுதி வாக்காளர்களையும் ஈர்க்கும் நோக்கில் அவர் இவ்வாறு உறுதிகூறியுள்ளார்.விஸ்கான்சினில் ஆகஸ்ட் 29ஆம் திகதி மேற்கொண்ட பிரசார உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக அன்று காலை மிச்சிகனில் ஆற்றிய உரையின்போது, தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் புதிதாகப் பிள்ளை பெற்றுக்கொண்டோர், பிறந்த குழந்தைக்கான பெரும்பகுதிச் செலவுகளை வரியில் கழித்துக்கொள்ளத் தமது நிர்வாகம் அனுமதிக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தார்.
தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பெண் வாக்காளர்களிடையே டிரம்ப்புக்கான ஆதரவு குறைந்துவிட்டதைக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
ஹாரிஸ் தமது பிரசார உரைகளில், கருக்கலைப்பு தொடர்பான டிரம்ப்பின் நிலைப்பாட்டைச் சாடுவதோடு குடும்பக் கட்டுப்பாடு, கருத்தரிப்பு சிகிச்சைகள் உட்பட பெண்களின் உரிமைகளுக்குக் குடியரசுக் கட்சியினர் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
அத்தகைய விமர்சனங்களைக் கையாளும் விதமாகத் டிரம்ப்பின் அண்மைய வாக்குறுதி அமைந்துள்ளது.
செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கான கட்டணங்களைத் தமது நிர்வாகம் எவ்வாறு செலுத்தும் என்ற மேல்விவரங்களையோ அமெரிக்க வரி நடைமுறையில் எத்தகைய மாற்றம் செய்யப்படும் என்பது குறித்தோ அவர் தெளிவுபடுத்தவில்லை.