ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத சூறாவளி – அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
ஜப்பானை பாதித்த ஷான்ஷன் புயலால் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிக்கு 252 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சூறாவளியின் தாக்கத்திலிருந்து 24 மணி நேரத்தில் கியூஷு தீவில் 600 மிமீ மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்புக்காக ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.
ஜப்பானின் தென் மேற்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை. கடுமையான வெப்ப மண்டலப் புயலாய் வலுவிழந்த சூறாவளி நாட்டின் வடகிழக்கு நோக்கி நகர்கிறது.
பல இடங்களில் கனத்த மழை பெய்கிறது. போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி Toyota, Nissan கார் உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாய் மூடியுள்ளன.
ஜப்பானின் தென் பகுதிக்குச் சென்று திரும்பும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில அதிவேக ரயில் சேவைகளும் முடக்கப்பட்டன.
முன்னதாக, காகோ-ஷிமா வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த சூறாவளி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.
இருப்பினும் இயற்கைப் பேரிடர் குறித்து மிகுந்த கவனமாய் இருக்குமாறு ஜப்பானிய வானிலை ஆய்வகம் மக்களைக் கேட்டுக்கொண்டது. வார இறுதியில் புயல் தலைநகர் தோக்கியோவை அடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.