ஒலிம்பிக் போட்டியின் போது ஒரே ஒரு செல்ஃபி… சி்க்கலில் வடகொரியா வீரர்கள்!
ஒலிம்பிக்கில் தென்கொரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்ட வடகொரிய டென்னிஸ் இணை, தண்டனைக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், சீன இணை தங்கம் வென்ற நிலையில், வடகொரியாவின் ரி ஜாங் சிக் – கிம் கும் யோங் இணை வெள்ளி வென்றது. தென்கொரிய இணை வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. பின்னர் பதக்கம் பெற்ற வெற்றியாளர்கள், ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டனர். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று வடகொரியா திரும்பிய அந்நாட்டு வீரர் – வீராங்கனைகள், கருத்தியல் மதிப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில், வடகொரிய அரசு நிர்ணயித்த மதிப்புகளை யாரேனும் மீறியது தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில், தென் கொரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்ட ரி ஜாங் சிக் மற்றும் கிம் கும் யோங் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் செல்வதற்கு முன்பாகவே, தென்கொரிய மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள கூடாது என, வடகொரிய வீரர்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.